சென்னை: “சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தை திருத்துவதற்கு, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது” என்று சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
பேரவையில் இன்று (மார்ச் 27) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிரான தனித்தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசியதாவது: “வேற்றுமையில் ஒற்றுமைகண்டு நாட்டுமக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு வாழும் நாடு இந்தியா. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டின் மக்கள் என்ற உண்மை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய நாட்டை ஆளும் அரசும், இத்தகைய உணர்வு கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும்.