சென்னை: “வழக்கம் போல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மாநிலங்களுக்கு இடையேயான வரி பகிர்வில் மத்திய பாஜக அரசு அப்பட்டமான பாரபட்ச போக்கை கடைபிடித்து வருகிறது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு முரணாகவும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து பின்பற்றுவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாடு முழுவதும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளால் பெறப்படும் நிதியை மத்திய அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒரு நிதியாண்டில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவிகிதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 28 மாநிலங்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 73 ஆயிரம் கோடியை வரி பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ளது.