கூடங்குளம்: மனிதக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் அறவழி போராட்டம் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியின் வடக்கு பகுதியில் கூடங்குளம் கிராம குடிநீர் ஆதாரம், அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பொது மருத்துவமனை, அணுமின் நிலையம், அணு சங்கமம் மகால், வழிபாட்டு தலங்கள், விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் கூடங்குளம் ஊராட்சியில் ரூ.3 கோடி செலவில் ஒன்றிய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மனிதக்கழிவு மேலாண்மை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் மனிதக் கழிவு மேலாண்மை திட்டம் அமைத்தால் காற்று மாசுபடும், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும், குடிநீர் ஆதாரங்கள் மாசுபடும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இத்திட்டத்திற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடங்குளம் ஊராட்சி தலைவி வின்சி மணியரசி, வார்டு உறுப்பினர்கள், ராதாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்களுடன் வந்து நெல்லை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும் இத்திட்டத்திற்கான பூர்வாங்கப் பணிகள், தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கூடங்குளம் பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நேற்று கருப்புக்கொடி கட்டியும், கடைகளை அடைத்தும் ேபாராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். அதன்படி கூடங்குளம் பகுதியில் உள்ள சுமார் 350க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டன. வீடுகளில் பொதுமக்கள் கருப்புக்கொடி கட்டி அறவழியில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
‘‘திட்டத்தை கைவிடுங்கள்’’
கூடங்குளம் ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் இசக்கியப்பன் தலைமையில் ராதாபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமார், ராதாபுரம் பிடிஓக்கள் உலகம்மாள், அலெக்ஸ், வருவாய் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் குழுவினர் ஊராட்சி தலைவர் வின்சி மணியரசி மற்றும் வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூடங்குளம் ஊர் பொதுமக்களின் ஒட்டுமொத்த குரலாக மனித கழிவு மேலாண்மை மையம் அமைக்கக் கூடாது எனவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மக்களின் கருத்தை நெல்லை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிப்பதாக அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.
The post மனிதக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு; கூடங்குளத்தில் வியாபாரிகள் கடையடைப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் appeared first on Dinakaran.