கொழும்பு: ‘தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஆனால் கச்சத்தீவை மீட்பது குறித்து பிரமதர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை. பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து 3 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு நேற்று முன்தினம் மாலை வந்தார். கொழும்பு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பயணத்தின் 2ம் நாளான நேற்று கொழும்பு சுதந்திர சுதுக்கத்தில் அரசு முறைப்படி அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்ற பிறகு இலங்கை வரும் முதல் வெளிநாட்டு தலைவர் என்பதால் பிரதமர் மோடிக்கு முப்படை அணிவகுப்புடன் வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுவரை இலங்கையில் எந்த வெளிநாட்டு தலைவரும் இப்படி வரவேற்கப்பட்டதில்லை. சுதந்திர சதுக்கத்தில், அதிபர் திசநாயக நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
பின்னர், திருகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலைய திட்டம், தம்புள்ளாவில் 5,000 மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தும் குளிர்பதன வசதி திட்டம், இலங்கை முழுவதும் 5,000 மத வழிபாட்டு தலங்களின் மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் நிறுவும் திட்டம் ஆகியவற்றை இரு தலைவர்களும் காணொலி மூலமாக தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில், பிரதமர் மோடி, அதிபர் திசநாயக தலைமையில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், பாதுகாப்பு, டிஜிட்டல் கட்டமைப்பு, எரிசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, திரிகோணமலையை எரிசக்தி மையமாக மாற்றுவது, கிழக்கு மாகாணத்தில் இந்தியா உதவியின் கீழ் கட்டமைப்புகள் உருவாக்கல், சுகாதாரம், பிராந்திய மேம்பாடு குறித்து 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரதமர் மோடியும், அதிபர் திசநாயகவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இரு நாட்டு மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். அதிபர் திசநாயக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். அதே போல, அவரது முதல் வெளிநாட்டு விருந்தினராகும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இது நமது இருதரப்பு உறவின் ஆழத்தின் அடையாளம். இந்தியாவின் அண்டை நாடுகளே முதலில் என்ற கொள்கையில் இலங்கைக்கு சிறப்பான இடம் உள்ளது. கடந்த 4 மாதத்திற்கு முன் அதிபர் திசநாயகவின் இந்திய பயணத்தை தொடர்ந்து நமது இருதரப்பு உறவு குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளது.
கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி என அனைத்து இடர்பாடுகளின் போதும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது. தற்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில், இலங்கைக்கு வழங்கிய ரூ.900 கோடிக்கும் அதிகமான கடன்களை மானியங்களாக மாற்றி உள்ளோம். இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் இலங்கை மக்களுக்கு உடனடி உதவியாக இருக்கும். தற்போது, வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். இலங்கை மக்களுடன் இந்தியா தொடர்ந்து துணை நிற்கிறது என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அதிபர் திசாநாயகவிடம் வலியுறுத்தினேன். மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளேன். இது இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் நிரந்தர தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் திசநாயக கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்திரி விடுத்த அறிக்கையில், ‘‘முதற்கட்டமாக 11 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் மீதமுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும்’’ என்றார். முன்னதாக, தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்து நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு மீட்பது குறித்து பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக பிரதமர் மோடி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* உயர் விருது வழங்கி கவுரவிப்பு
இலங்கையில் அரசு தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் உயர் விருதான மித்ர விபூஷணா விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் திசநாயக வழங்கி கவுரவித்தார். இதற்கான பதக்கத்தை அவர் பிரதமர் மோடிக்கு அணிவித்தார். இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் பிரதமர் மோடியின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது.
இதற்கு முன் இவ்விருது மாலத்தீவு முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம், மறைந்த பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் ஆகிய இரு வெளிநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விருது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்த விருது 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம்’’ என்றார்.
* தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் சந்திப்பு
கொழும்புவில் பிரதமர் மோடி நேற்று இலங்கை தமிழ் அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். இது தொடர்பாக எக்ஸ் தளப்பில் பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர்.
இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும்’’ என கூறி உள்ளார்.
* 13வது சட்டதிருத்தத்தை அமல்படுத்த வேண்டும்
அதிபர் திசநாயக உடனான பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழர்கள் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இலங்கை தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் மக்களுக்கு விரைவில் 10,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அனுர குமார திசநாயக உறுதியளித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் 13வது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தி இலங்கை அரசு தனது உறுதிமொழியை நிலைநாட்டும் என்று நம்புகிறேன். அதே போல மாகாண தேர்தலையும் நடத்த வேண்டும். இலங்கை தமிழர் மீள்குடியேற்றம் மற்றும் மறுகட்டமைப்பு குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தினோம்’’ என்றார்.
* இந்தியாவை பாதிக்கும் எதற்கும் அனுமதி இல்லை
பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நமது இருதரப்பு பாதுகாப்பு நலன்கள் ஒரே மாதிரியானவை என்று நாங்கள் நம்புகிறோம். இரு நாடுகளின் பாதுகாப்பும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. ஒன்றையொன்று சார்ந்துள்ளது. இந்தியாவின் நலன்களுக்கு அதிபர் திசநாயக தரும் முக்கியத்துவத்திற்கு நன்றி கூறுகிறேன்’’ என்றார். இலங்கை அதிபர் திசநாயக பேசுகையில், ‘‘இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயல்களுக்கும் இலங்கை தனது பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்காது’’ என உறுதி அளித்தார்.
The post மனிதாபிமான முறையில் நடவடிக்கை தேவை தமிழ்நாடு மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் வலியுறுத்தல்; கச்சத்தீவு குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை appeared first on Dinakaran.