ஸ்ரீவில்லிபுத்தூர்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 7வது மணல் திருட்டில் அரிய வகை ஆலா பறவையினங்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் ரவீந்திரன் நடராஜன் மற்றும் பைஜூ ஆகியோர் தெரிவித்துள்ளனர். மணல் திட்டுகளில் தத்தி… தத்தி… தாவி… தாவி… சென்று மனதை மயக்கும் இந்த பறவையினங்கள் குறித்து அவர்கள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கும் ராம்-சேது மணல் திட்டுக்கள் அதிகளவில் உள்ளன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய கடல் பறவை இனப்பெருக்க காலனிகளில் ஒன்றாக இப்பகுதி திகழ்கிறது.
6 அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப்பெரிய இனப்பெருக்க தளமாக இப்பகுதி விளங்குகிறது. இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இதனை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையைச் சேர்ந்த ரவீந்திரன் நடராஜன், பறவை ஆய்வாளர்கள் பைஜூ, மைத்ரி, பேராசிரியர் ரவிச்சந்திரன், உயிரியலாளர் மார்சல் ஆகியோர் குழு, ராமநாதபுர வனத்துறையின் வனஉயிரின பிரிவுடன் இணைந்து தங்களின் தொடர் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
5 ஆண்டுகளாக ஆய்வு…
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை ராமநாதபுரம் வனத்துறையுடன் இணைந்து அம்மாவட்ட பறவை சரணாலயங்களில் பறவைகளின் வருகை, இனப்பெருக்கம், வலசை பறவைகளின் வருகை, எண்ணிக்கை, புதிய வாழ்விட பகுதிகளைக் கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் அனுமன் உப்புக்கொத்தி, நண்டுண்ணி உள்ளான், ஆழிக்கழுகு, கண்டங்கள் கடந்து வரும் ஆல்பட்ரஸ், ஆர்ட்டிக் ஸ்குவா, பழுப்பு ஆலா, மற்றும் அரிய ஆழ் கடல் பகுதிகளில் மட்டுமே வாழும் பறவை இனங்களை கண்டறிந்து மன்னார் வளைகுடா பகுதியின் அரிய பறவையினங்களை பட்டியலிட்டுள்ளனர்.
ஆளை மயக்கும் ஆலா பறவைகள்…
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆழ் கடல் பறவையினங்களின் வருகையை பதிவு செய்தபோது பிரிட்ல்டு ஆலா, சாண்டர்ஸ் ஆலா, சிறிய ஆலா, பெரிய கொண்டை ஆலா மற்றும் ரோஸேட் ஆலா மற்றும் சிறிய பெரிய பழுப்பு ஆலாக்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகரிப்பது கண்டு, அங்குள்ள மணல் திட்டுக்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம் இந்திய கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஆலா பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டது. குறிப்பாக 3 மற்றும் 7ம் மணல் திட்டுப்பகுதியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலா பறவைகள் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. ஆறு வெவ்வேறு ஆலா பறவை இனங்கள் ஒரே பகுதியை தேர்வு செய்து ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கம் செய்வது ஒரு அரிய நிகழ்வாகும். இப்பகுதிகளில் சுமார் 3,500 கூடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மீன்கள் இருக்கும் பகுதியை அடையாளம் காட்டும்…
இதன் முக்கியத்துவத்தை இப்பகுதியில் உள்ள மீனவர்களோ, கடலோரக் காவல் படையினரோ அறிந்திருக்க வில்லை. அமைதியான சூழலை விரும்பி இனப்பெருக்க நடைபெறும் நேரத்தில் குஞ்சுகளையும் முட்டைகளையும் தூக்கிச் சென்று விடும் சூழலும் உள்ளது. இந்த அரிய வகை ஆலா பறவைகளை பாதுகாப்பது குறித்து உள்ளூர் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவற்றை அவர்கள் ‘பில்லுக் குஞ்சி’ என்று அழைக்கிறார்கள். பொதுவாக ஆலா பறவைகளை கடலில் மீன்கள் அதிகம் இருக்கும் பகுதியை அடையாளம் காட்டும் பறவைகளாக மூத்த மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சரணாலயமாக அறிவிக்க வேண்டும்…
இந்தப் பகிரப்பட்ட சுற்றுச்சூழல் புதையலைப் பாதுகாக்க இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே எல்லை தாண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்த பறவைகளின் இனப்பெருக்க காலனி பகுதிகள் காக்கப்பட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் மனித அலட்சிய போக்காலும், பிளாஸ்டிக், குப்பைகள், முறையற்ற வலைகளால் மீன்பிடிப்பு, புவிசார் அரசியல், காலநிலை மாற்றம், வெப்பம், கடல் சீற்றம் போன்றவற்றால் நமது கடல் பரப்புக்கள், கடல்சார் உயிரினங்கள் பெரும் பாதிப்பை அடைந்து வருகின்றன.
நீர்நிலைகளின் நடுவில் மரங்களில் கூடு கட்டும் பறவைகளின் வாழ்விடங்களை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவிக்கிறதோ, அதுபோல நிலத்தில், மணல் திட்டுகளில் அதிக எண்ணிக்கையில் கூடு கட்டி வாழும் பறவையினங்கள் உள்ள பகுதிகளையும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கப் பட்ட சரணாலயப் பகுதிகளாக அறிவித்து, இந்தியாவின் பல்லுயிர்த் தன்மையை பாதுகாக்க வேண்டும். இந்த கடல் வெளிகளும், கடற்கரைப் பகுதிகளும், மணல் திட்டுக்கள் கடற்பறவைகளுக்கும் கடல் ஆமைகளுக்கும் உயிர்நாடியாக உள்ளன என ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மன்னார் வளைகுடா பகுதியில் பணியாற்றிய இறகுகள் ரவீந்திரன் நடராஜன் மற்றும் முதன்மை எழுத்தாளர் பைஜூ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
The post மன்னார் வளைகுடா மணல் திட்டுகளில் தத்தி… தத்தி… தாவி… தாவி… மதிமயக்கும் அரிய வகை ஆலா பறவை இனங்கள்: அமைதியான சூழலில் இனப்பெருக்கம்: சரணாலயமாக அறிவிக்க கோரிக்கை appeared first on Dinakaran.