“நான் ஒரு குக்கிராமத்தில் பிறந்தேன். அந்த கிராமம் இப்போது இந்தியாவில் இல்லை. மிக இளம்வயதிலேயே வீடு, உடைமைகளை இழந்தேன். அகதியாக இந்தியாவுக்கு வந்தேன். இறுதியில் அசாமில் எனக்கு ஒரு வீடு கிடைத்தது. இதற்காக அசாம் மக்களுக்கு நான் என்றென்றும் கடமைபட்டிருக்கிறேன்" என்று கடந்த 2012-ம் ஆண்டில் மன்மோகன் சிங் கூறினார்.
அசாமின் குவாஹாட்டி நந்தன் நகரில் உள்ள 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு கடந்த 30 ஆண்டுகளாக மன்மோகன் சிங்கின் முகவரியாக இருந்து வருகிறது. இந்த வீட்டின் முகவரியில்தான் அவரது வாக்காளர் அட்டை உட்பட அனைத்து அடையாள அட்டைகளும் உள்ளன. இந்த வீட்டில் அவர் நிரந்தரமாக வாழவில்லை. ஆனால் இதுதான் அவரது முகவரி. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் அசாமில் இருந்து மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டார். அப்போதுமுதல் குவாஹாட்டி அவரது 2-வது தாய்வீடாக மாறியது.