புதுடெல்லி: அன்று சோனியா காந்திக்கு கிளம்பிய எதிர்ப்பால் பிரதமரானார் மன்மோகன் சிங். அவருக்கு கிடைத்த இரண்டு முக்கியப் பதவிகளின் பின்னணியும் மிக ஆச்சரியத்துக்கு உரியதாக கருதப்படுகிறது.
கடந்த 1991-ல் பி.வி.நரசிம்மராவ் பிரதமர் பதவியில் அமர்ந்தார். அப்போது அவருக்கு ஒரு திறமையான நிதி அமைச்சர் தேவைப்பட்டது. இதன் பின்னணியில் பிரதமராவதற்கு இரு தினங்கள் முன்பாக கேபினட் செயலாளரான நரேஷ் சந்திரா, நரசிம்மராவுக்கு எழுதிய கடிதம் இருந்தது. அந்த 8 பக்கக் கடிதத்தில் அவர், நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.மத்திய அமைச்சரவையில் கல்வி, வெளியுறவு மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளை நரசிம்மராவ் வகித்துள்ளார். ஆனால், அவருக்கு நிதி அமைச்சகத்தில் அனுபவம் இல்லை. இதனால், பிரதமர் நரசிம்மராவின் ஆலோசகரான பி.சி.அலெக்ஸாண்டர், பேராசிரியர் மன்மோகன் சிங்கின் பெயரை பரிந்துரைத்தார். இதற்கு முன்பாக அவர் குஜராத்தின் ஐ.ஜி.பட்டேலையும் பரிந்துரைத்திருந்தார்.