மதுரை: மதுரை சாலையோரங்களில் உள்ள பழமையான மரங்கள், அதன் கிளைகள், ஒடிந்து விழக்கூடிய அபாயகரமான மரங்கள் காற்றில், மழையில் ஒடிந்து மின்வயர்கள் மீது விழுந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றன. இந்த மரங்களை அப்புறப்படுத்த மின்வாரியத்தில் ஆட்கள் இல்லாததால் மரங்களை வெட்டவதற்கும், அவற்றை அப்புறப்படுத்துவதற்கும், மாநகராட்சிக்கும், மின்சார வாரியத்திற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மதுரை 3,500 ஆண்டிற்கு முன்பே உருவான பழமையான நகரம். இந்த நகரத்தில் உள்ள மாநகராட்சி சாலைகள், மாநில நெடுஞ்சாலைத்துறை சாலைகள் அனைத்தும் குறுகலாக உள்ளன. இந்த சாலையோரங்களில் கடந்த காலத்தில் நிழல் தருவதற்காக மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு வகை மரங்களை நட்டுள்ளன. இந்த மரங்கள், தற்போது மிக பழமையான மரங்களாக காற்றும், மழைக்கும் எந்த நேரத்திலும் ஒடிந்து விழக்கூடிய வகையில் அபாயகரமானநிலையில் உள்ளன. சில மரங்கள், பச்சை மரங்களாக நின்றாலும், அவை இலேசான காற்றும், மழைக்கும் கீழே விழுகின்றன.