மருத்துவக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில், நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்கள் – குழந்தைகள் நலப் பராமரிப்பு, தொற்றுநோய் – தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் தமிழ்நாட்டின் செயல்பாடு சிறப்பாகவே தொடர்கிறது.
திட்டமிடப்பட்ட சுகாதாரக் கட்டமைப்புகள், ஆக்கபூர்வமான திட்டங்கள், உயர்தரச் சிகிச்சைகள் போன்றவை இதற்கு அடித்தளமாக உள்ளன. சுகாதாரத் துறையின் இத்தகைய நிறைகளுக்கு மத்தியில், சில குறைகளும் நீடிக்கின்றன. பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாதது, மருத்துவத் துறையினரின் வேலைப் பளு போன்றவை தமிழக சுகாதாரத் துறைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.