ரோம்: சுவாச கோளாறால் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அவர் பூரண நலம் பெற வேண்டி வாடிகன் தேவாலயம் முன்பு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ்( 88) நுறையீரல் தொற்று காரணமாக கடந்த 14ம்தேதி ரோம் நகரில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா மற்றும் சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக ஒரு வாத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போப்பிற்கு, ரத்த சோகை ஏற்பட்டுள்ளது. குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை காரணமாக ரத்த மாற்றத்திற்கும் உட்படுத்தப்பட்டார். நேற்று முன்தினம் சுவாச பிரச்னை ஏற்பட்டதால் அவருக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வந்தன. வாடிகன் தேவாலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போப்பிற்கு சுவாசிப்பதில் பிரச்னை உள்ளதால், அவருக்கு அதிகளவில் செயற்கை சுவாசம் (ஆக்ஸிஜன்) அளிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அவர் தற்போது வரை ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டு வரவில்லை என தெரிவித்துள்ளது. வாடிகன் நகர செய்தி தொடர்பாளர் மாத்யூ புருனி கூறுகையில்,‘‘ நேற்று முன்தினம் இரவு அமைதியாக கழிந்தது. போப் நன்றாக ஓய்வு எடுத்தார்’’ என தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் காலையில் எழுந்து உட்கார்ந்தாரா, காலை உணவு எதுவும் சாப்பிட்டாரா என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ராஜினாமாவா? இதற்கிடையே வாடிகன் நகர செயலாளர் கர்தினால் பீட்ரோ பரோலின், போப் ராஜினாமா குறித்து வரும் வதந்திகளை மறுத்துள்ளார்.போப் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதால், அவர் பூரண நலம் பெற வேண்டி வாடிகன் தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
The post மருத்துவமனையில் தீவிர சிகிச்சை போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்: வாடிகனில் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.