சென்னை: மருத்துவக்கழிவு விவகாரத்தில் எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த பத்தாண்டுகால அடிமை அதிமுக ஆட்சியில் தான், கோவை, தேனி , திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாடு கேரளா எல்லையோர பகுதிகளில், கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக கழிவுகளை கொண்டுவந்து கொட்டி தமிழ்நாடே கேரளாவின் குப்பைத்தொட்டியாகி கிடந்தது.
முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடனே தமிழ்நாடு கேரளா எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கபட்டு வருகிறது. கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர் பகுதிகளில் சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டப்படுகிறது என புகார் வந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்ததன் பேரில், கழிவுகளை கொட்டிய சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த மனோகரன், மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு – கேரளா எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மருத்துவ கழிவு விவகாரம் எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்க துடிக்கிறார் எடப்பாடி: அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி appeared first on Dinakaran.