ரசீது இல்லாமல் மருந்து விற்பனையில் ஈடுபட்ட 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளிவந்துள்ளது. மருத்துவர் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரை, தூக்க மாத்திரைகளை விற்ற 31 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே புகாரின்பேரில் 56 மொத்த விற்பனை மையங்களின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகள் விற்கப்படும் புகார் நீண்டகாலமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்தகங்கள் உட்பட, நாடு முழுவதும் 15 லட்சம் மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. சாதாரண, ஏழை, எளிய மக்கள் தங்களது சிறு உபாதைகளுக்கு மருந்தகங்களை அணுகி மாத்திரைகளை வாங்கி நிவாரணம் பெற்று வருகின்றனர். மருந்தகங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், சாதாரண மக்கள் இதுபோன்று மருந்துகளை வாங்குவதற்கான தடையை உருவாக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.