எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’யை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. 1947-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது என்றாலும் அந்த வெற்றிக்கு, தான் காரணமல்ல என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். இதனால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக, தன்னை முன்னிலைப் படுத்தும் ஒரு கதையை எழுத ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். அப்படி அவர் உருவாக்கிய ஸ்கிரிப்ட் தான் ‘மர்மயோகி’!
அந்த காலத்து ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோக்களான டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் (Douglas Fairbanks) எர்ரோல் பிளைன் (Errol Flynn) ஆகியோரின் தீவிர ரசிகராக எம்.ஜி.ஆர் இருந்ததால், அவர்களின் படங்களைப் போன்ற ஆக்‌ஷன் கதையை விரும்பினார். ஆங்கில எழுத்தாளர் மேரி கோரெல்லி எழுதிய ‘வெஞ்சன்ஸ்’ என்ற நாவல், ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில் 1948-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத் மற்றும் ராபின் ஹுட்’ படங்களின் தாக்கத்தில் இந்தக் கதையை உருவாக்கினார் ஏ.எஸ்.ஏ.சாமி.