மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் ஆட்டத்தில் 9-21, 21-12, 21-6 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஹுவாங் யுவை தோற்கடித்தார். தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் மற்றொரு சீன தைபே வீரரான குவோ குவான் லின்னை 21-8, 21-13 என்ற நேர் செட்டில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற 32 வயதான கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரதான சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் லு குவாங் ஸூவுடன் மோதுகிறார். மற்ற இந்திய வீரர்களான தருண் மனேபள்ளி, சங்கர் முத்துசாமி ஆகியோர் தகுதி சுற்றில் தோல்வி அடைந்தனர். மகளிர் ஒற்றையர் தகுதி சுற்றில் இந்தியாவின் அமோல் ஹார்ப் தோல்வியை சந்தித்தார்.