* 10ம் தேதி தெப்ப உற்சவம்
திருச்சி: மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்திரத்திற்கு முந்தைய நாளில் தெப்பத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று(2ம் தேதி) காலை 11 மணியளவில் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடி, தாயுமானசுவாமி கோயிலிருந்து மேள தாளங்கள் முழங்க வீதியுலாவாக மலையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயில் கம்பத்தடி மண்டபம் சென்றடைந்தது.
பின்னர் கொடிமரத்தின் அருகில் தாயுமானவர், பிரியாவிடை, மட்டுவார் குழலம்மை, பஞ்சமூர்த்திகள் எழுந்தருள கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு பல்லக்கு புறப்பாடு, இரவு 7 மணிக்கு சுவாமி கற்பகவிருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வலம் வருகின்றனர். 4ம் தேதி சுவாமி பூதவாகனம், அம்பாள் கமல வாகனம். 5ம் தேதி சுவாமி கைலாசபர்வதம் வாகனம், அம்பாள் அன்னவாகனம், 6ம் தேதி சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம், 7ம் தேதி சுவாமி யானை வாகனம், அம்பாள் கண்ணாடி பல்லக்கு, 8ம் தேதி சுவாமி நந்திகேஸ்வரர் வாகனம், அம்பாள் சிம்ம வாகனம், 9ம் தேதி சுவாமி தங்க குதிரை வாகனம், அம்பாள் கண்ணாடி பல்லக்கு என தினமும் ஒவ்வொரு வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வரும் 10ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும். அன்று காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு மேல் தெப்பத்திற்கு செல்ல புறப்பாடு நடைபெறும். மாலை 7 மணிக்கு தெப்பக்குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். தொடர்ந்து 11ம் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, அதனை தொடர்ந்து தீர்த்தவாரி, மாலை 6 மணிக்கு சேர்த்தி சேவை புறப்பாடு நடக்கிறது. இரவு 10 மணிக்கு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
The post மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.