சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 430 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
தாழ்வு மையம் நகரும் வேகம் குறைந்ததன் காரணமாக நேற்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றம் காரைக்கால் பகுதிகளிலும் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post மழைக்கு வாய்ப்பு மக்களே..! தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.