தேனி: தேனி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து இல்லாமல், நீர்மட்டம் குறைந்து வருகிறது. வைகை, பெரியாறு அணைகளுக்கு மிகக்குறைந்த அளவிலே நீர்வரத்து உள்ளது. தேனி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில், அதிக மழைப் பொழிவு இருந்ததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தன. இதனால் அனைத்து அணைகளில் இருந்தும் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி மாதத்திற்குப் பின்பு தேனி மாவட்டத்தில் குறைந்த மழைப்பொழிவே இருந்தது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து தற்போது தண்ணீர் வரத்து இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது.
ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 58.5 அடி. நீர்வரத்து வினாடிக்கு 181 கனஅடி. நீர்திறப்பு 72 கனஅடி. நீர் இருப்பு 3324 மில்லியன் கன அடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடி. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 85.48 மில்லியன் கனஅடி. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 67.40 அடி. நீர்வரத்து இல்லை. நீர் திறப்பு 3 கனஅடி. நீர்இருப்பு 27.97 மில்லியன் கனஅடி. 52.55 அடி உயரமுள்ள சண்முகநதி அணையின் நீர்மட்டம் 34 அடி. நீர்வரத்து இல்லை. நீர்வெளியேற்றம் இல்லை. நீர்இருப்பு 31.08 மில்லியன் கனஅடி.
பெரியாறு அணைக்கு குறைந்த நீர்வரத்து
152 உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 113 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 127 கனஅடி. அணையில் இருந்து நீர்வெளியேற்றம் 105 கனஅடி. நீர் இருப்பு 1,392 மில்லியன் கன அடி.
The post மழை இல்லாததால் நீர்வரத்து இல்லை: தேனி மாவட்டத்தில் நீர்மட்டம் குறைந்து வரும் அணைகள் appeared first on Dinakaran.