சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர் தொழிலக எஸ்டேட்டை ஒட்டிய அத்திப்பட்டு, அயப்பாக்கம், ஐசிஎப் காலனி, மேல் அயனம்பாக்கம், கீழ் அயனம்பாக்கம் பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு இணையாக குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன. மேல்அயனம்பாக்கம் மற்றும் அத்திப்பட்டு பகுதிகளில் இயங்கும் பிரபலமான தனியார் பள்ளிகளில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
முகப்பேர், நொளம்பூர், மதுரவாயல் மற்றும் வானகரம் பகுதிகளில் இந்த பள்ளிகளுக்கு செல்ல மாந்தோப்பு சாலையும், மேல்அயனம்பாக்கத்தில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையும் பிரதானமாக உள்ளது. இதேபோல அத்திப்பட்டு, ஐசிஎப் காலனி, அம்பத்தூர் பகுதியில் வசிப்பவர்களுக்கு செட்டிதெரு வழியாக செல்லும் அயப்பாக்கம் சாலையும், செல்லியம்மன் நகர், ராம்பூர்ணம் நகர் விரிவாக்கம், ஜேஆர் கேஸ்டில் டவுன், நியூ சென்னை சிட்டி வழியாக மேல்அயனம்பாக்கம் நோக்கி செல்லும் குறுகலான சிமெண்ட் கால்வாய் சாலையும் பிரதானமாக இருந்து வருகிறது. பள்ளி வேளைகளில் இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.