கடலூர்: மாசிமகத்தையொட்டி கடலூர் கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாசிமக விழாவான இன்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோயில்களில் இருந்து சுவாமிகளை வாகனங்களில் வைத்து, வீதி உலாவாக மேளதாளம் முழங்க, தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். காலை 7 மணியில் இருந்தே தேவனாம்பட்டினம் சாலை வழியாக சுவாமிகள் வீதி உலாவாக மாசி மகத்திருவிழாவுக்கு வந்தன.
இதையடுத்து கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியின் போது சுவாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால், கடற்கரையில் பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தனர். உற்சவ மூர்த்திகளுக்கு தேங்காய், பழம் போன்ற பூஜைக்குரிய பொருட்களை வைத்து, தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர். மாசிமக விழாவில் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், திருவந்திபுரம் செங்கமலத்தாயார் சமேத தேவநாதசுவாமிகள், வரதராஜ பெருமாள், வண்டிப்பாளையம் சுப்ரமணியசாமி, அங்காளம்மன், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜபெருமாள், செல்லங்குப்பம் பொட்லாயி அம்மன், மற்றும் கடலூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
மேலும் கடலூர் சில்வர் பீச்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடலூர் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ரூபன் குமார் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
The post மாசி மகத்தையொட்டி இன்று கடலூர் கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.