நாகர்கோவில்: நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் மாதிரி ரவுண்டானா அமைக்க வசதியாக சென்டர் மீடியன்கள் அகற்றப்பட்டன. அடுத்த கட்டமாக உயர்கோபுர மின் விளக்கும் அகற்றப்பட உள்ளது. நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இது குறித்து, மாநகராட்சி மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வந்ததால், இந்த பணிகள் முடிவடைந்த உடன் ரவுண்டானா அமைப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் மகேஷ் தெரிவித்திருந்தார்.
பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து, சாலைகள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரவுண்டானா அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா? அவ்வாறு ரவுண்டானா அமைந்தால் நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் செல்ல வாய்ப்பாக இருக்குமா? என்பதை கண்டறியும் வகையில் செட்டிகுளம் சந்திப்பில் கடந்த டிசம்பரில் இருந்து பேரிகார்டுகள் வைக்கப்பட்டு சாலையை பிரித்து வாகனங்களை அனுப்பி வருகிறார்கள். இதில் நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் செல்கிறதா? என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் இருந்து செட்டிக்குளம் வரக்கூடிய வாகனங்கள் தான் அதிகளவில் நெருக்கடிக்கு உள்ளாகின. கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரியில் கன்னியாகுமரியில் சீசன் காலம் என்பதால், அதிகளவில் வாகனங்கள் வந்தன.
செட்டிக்குளம் சந்திப்பு – வேப்பமூடு சந்திப்பு ஒரு வழிப்பாதையாக இருந்தது. இதை இரு வழிப்பாதையாகவும் மாற்றினர். ராமன்புதூர் சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் சந்திப்புக்கு வாகனங்கள் வரும் போது அவை எளிதாக திரும்பும் வகையிலும் ஏற்பாடு செய்ய ஆய்வு செய்யப்பட்டது. சாலையை விரிவாக்கம் செய்தால் மட்டும் ரவுண்டானா சாத்தியமாகும் என போலீசாரும் கூறி இருந்தனர். இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினருடன் இணைந்து இந்த பகுதியை ஆய்வு செய்தார். அப்போது செட்டிக்குளம் சந்திப்பில் தற்போது உள்ள உயர் கோபுர மின் விளக்கை அகற்ற வேண்டும். ராமன்புதூர் சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் சந்திப்புக்கு வரும் சாலையில் உள்ள சென்டர் மீடியன்களில் 10 ல் இருந்து 15 சென்டர் மீடியன்களை அகற்ற வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று செட்டிக்குளத்தில் இருந்து ராமன்புதூர் சந்திப்புக்கு வரும் பாதையில் 15 சென்டர் மீடியன்கள் அகற்றப்பட்டன. இந்த சென்டர் மீடியன்கள் வேறு பகுதியில் பயன்படுத்தப்படும். செட்டிக்குளம் சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு அகற்றும் பணியும் விரைவில் தொடங்கும் என தெரிகிறது. அதன் பின்னர் முதற்கட்டமாக மணல் மூடைகள் அடுக்கி மாதிரி ரவுண்டானா அமைத்து ஒத்திகை பார்க்கப்படும் என தெரிகிறது. செட்டிக்குளம் சந்திப்பில் மாநகராட்சி இடம் ஆக்ரமிப்பில் இருந்தால் அவை அகற்றப்படும். தேவைப்படும் பட்சத்தில் தனியார் உதவிகள் கோரப்படும். முதற்கட்டமாக மணல் மூடைகள் அடுக்கி மாதிரி ரவுண்டானா வைத்த பின்னர் தான் எவ்வளவு இடம் தேவை என்பதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியும் என அதிகாரிகள் கூறினர்.
The post மாதிரி ரவுண்டானா அமைக்க செட்டிக்குளம் சந்திப்பில் சென்டர் மீடியன்கள் அகற்றம்: உயர் கோபுர மின் விளக்கையும் அகற்ற திட்டம் appeared first on Dinakaran.