புதுடெல்லி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசும்போது பயன்படுத்திய ஒரு வார்த்தைக்கு எதிராக பாஜக கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவர் தனது பேச்சுக்காக மன்னிப்புக் கோரினார்.
மாநிலங்களவையில் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமை தாங்கி அவையை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, கல்வி குறித்த விவாதத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங்கை பேச அழைத்தார். எனினும், திக்விஜய் சிங் பேச மறுத்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதலில் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கார்கே ஏற்கெனவே காலையில் பேசியதை ஹரிவன்ஷ் நினைவூட்டினார். அதற்கு கார்கே ஆட்சேபனை தெரிவித்தார். காலையில் தான் பேசியபோது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இல்லாததால் தனது கருத்துகள் முழுமையடையவில்லை என்று கார்கே கூறினார்.