புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. மாநிலங்களவையை மிகவும் ஒரு சார்பாக நடத்தும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இது மிகவும் வேதனையான முடிவு. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நலன்களுக்காக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது. இதற்கான முன்மொழிதல் மாநிலங்களவை பொதுச் செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.