சென்னை: ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரை அனைத்து நிலைகளிலும் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தான் உறுதி செய்து வருகின்றன என்றும் மாநில உரிமைகளை பேசுவதற்கு ஒன்றிய அரசில் எந்த அமைப்பும் இல்லை. இதுதான் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சியின் மகிமை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவில் மாநிலங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது ஒன்றிய அரசிடம் சென்ற பிறகு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி பகிர்வை அரசமைப்புச் சட்ட உறுப்பு 280-ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படும் நிதிக்குழு பரிந்துரை செய்கிறது. அந்த பரிந்துரையின்படி தான் ஒன்றிய – மாநில அரசுகளிடையே வரி பகிர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, 15-வது நிதிக்குழு 2021 முதல் 2026 வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இக்குழு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வை 41 சதவிகிதமாக குறைத்திருக்கிறது.