சென்னை: மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மாநிலங்களின் கல்வி சுயாட்சியை சிதைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராட வேண்டிய நேரமிது.
பல்கலைக் கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற முயற்சி
மாநில அரசு உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக் கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற மோடி அரசு முயற்சி. நமது கல்வி வளர்ச்சியைத் தடுக்க மோடி அரசு முயல்கிறது. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக யுஜிசி அறிவிப்பை வெளியிட்டிருப்பது அத்துமீறல்.
மோடி அரசின் மிரட்டலுக்கு திராவிடமாடல் அரசு அஞ்சாது
மோடி அரசின் மிரட்டல், உருட்டல்களுக்கெல்லாம் ஒருநாளும் திராவிட மாடல் அரசு அஞ்சாது. மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே உரிமை கிடையாது என்பது சர்வாதிகார ஆணவம் அல்லவா?. தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என விதிகளை வகுக்கிறார்கள். மாநில அரசுகளை மிரட்டிப் பார்க்கும் நடவடிக்கை இது என்று அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.
விஷம செயலை முளையிலேயே கிள்ளி எறிதல் அவசியம்
விஷ செடியையும், விஷம செயலையும் முளையிலேயே கிள்ளி எறிதல் அவசியம். மோடி அரசுக்கு உட்பட்ட யுஜிசியின் சர்வாதிகார செயலையும் நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்கி கூட்டாட்சிக்கு குழி பறிக்கும் யுஜிசி விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும். யுஜிசி விதிகளை திரும்பப் பெறும் வரை திராவிட மாடல் அரசு ஒரு நொடியும் பின்வாங்காது என தெரிவித்தார்.
The post மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன் appeared first on Dinakaran.