சென்னை: “தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக சர்வாதிகாரி போன்று செயல்பட்டு வந்த ஆளுநருக்கு சாட்டையடி கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கு ஆளுநராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ்ஸின் அடியாளாகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஆர்.என்.ரவி. குறிப்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வந்துள்ளார். ஒரு சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து, காலம் கடத்தியும் வந்திருக்கிறார்.