சென்னை: ஒன்றிய பா.ஜ.க. அரசை பொறுத்தவரை அனைத்து நிலைகளிலும் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தான் உறுதி செய்து வருகின்றன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; இந்தியாவில் மாநிலங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது ஒன்றிய அரசிடம் சென்ற பிறகு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி பகிர்வை அரசமைப்புச் சட்ட உறுப்பு 280-ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படும் நிதிக்குழு பரிந்துரை செய்கிறது. அந்த பரிந்துரையின்படி தான் ஒன்றிய – மாநில அரசுகளிடையே வரி பகிர்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி, 15-வது நிதிக்குழு 2021 முதல் 2026 வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இக்குழு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வை 41 சதவிகிதமாக குறைத்திருக்கிறது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்டமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி. ரெட்டி தலைமையிலான 14-வது நிதிக்குழு 42 சதவிகித நிதி பகிர்வை 2015 முதல் 2020 வரை பரிந்துரை செய்தது. அதேபோல, 1971 மக்கள் தொகை அடிப்படையில் நிதி பகிர்வு செய்யப்பட்டது. ஆனால், 15-வது நிதிக்குழு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நிதி பகிர்வை செய்து வருகிறது.
இதனால், 1976 முதல் ஒன்றிய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மிகச் சிறப்பாக செய்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் நிதி பகிர்வில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஒன்றிய பா.ஜ.க. அரசை பொறுத்தவரை அனைத்து நிலைகளிலும் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தான் உறுதி செய்து வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஒன்றிய அரசு எடுக்க இருக்கும் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி தருகிற வகையில் ஆங்கில நாளேடு ஒன்றில் இன்று செய்தி வெளிவந்திருக்கிறது.
அதன்படி, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்குகிற நிதி பகிர்வை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா சமர்ப்பித்த பரிந்துரைகள் வருகிற அக்டோபர் 31 முதல் 2026-27 ஆம் நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த பரிந்துரையின்படி, மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்த 41 சதவிகித மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 40 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த பரிந்துரையை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு மார்ச் மாத இறுதியில் ஒப்புதல் வழங்கிய பிறகு, 15-வது நிதிக்குழுவால் அது நடைமுறைக்கு வரும் என்று அச்செய்தி கூறுகிறது.
இந்த செய்தி உறுதியானால் 1 சதவிகித நிதி பகிர்வு குறைப்பினால் ஒன்றிய அரசிற்கு ரூபாய் 35,000 கோடி கூடுதலாக வருவாய் கிட்ட வாய்ப்பு இருக்கிறது. நடப்பாண்டில் வரி வருவாயின் மூலம் கிடைக்கிற தொகையின் அடிப்படையில் இத்தொகை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி ஆணைய முடிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த அறிவிப்பினால் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. தென் மாநிலங்களுக்கு 2014 இல் வரி பகிர்வு 18.62 சதவிகிதமாக இருந்தது. 2024 இல் 15.8 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
இதன்படி, ஒன்றிய அரசுக்கு உத்தரபிரதேசம் ஒரு ரூபாய் வரியாக வழங்கினால் ரூபாய் 2.73 திரும்ப கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு 29 பைசா தான் திரும்ப கிடைக்கிறது. ஒன்றிய அரசின் வரி வருவாயில் மட்டும் தான் மாநிலங்களுக்கு பங்கு தரப்படுகிறது. ஆனால், செஸ், சர்சார்ஜ் மூலம் வசூலிக்கப்படுகிற தொகையில் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு பகிர்ந்து கொள்வதில்லை. ஸ்வச் பாரத் செஸ், அடிப்படை கட்டமைப்பு வரி, சுகாதாரம் மற்றும் கல்வி செஸ், விவசாய கட்டமைப்பு செஸ் போன்ற வரி விதிப்புகளில் மாநிலங்களுக்கு பங்கு மறுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வரிகளில் ஒன்றிய அரசின் வருவாய் 2024 இல் 26 சதவிகிதமாக இது உயர்ந்து விட்டது.
இந்த வரி வருவாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. அதேபோல, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வரி விதிக்கும் அதிகாரத்தை மாநிலங்கள் இழந்து விட்டன. இதன்மூலம் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு ஒரே மறைமுக வரியாக ஜி.எஸ்.டி. உள்ளது. இத்தகைய அணுகுமுறை மாநில உரிமைகளை பறிக்கிற செயல் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் ? கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து திட்டக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. மாநில நலன் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய வளர்ச்சிக்குழு செயல்பட்டது.
ஆனால், பா.ஜ.க. அரசு இந்த இரு அமைப்புகளையும் கலைத்து விட்டது. இதனால் மாநில உரிமைகளை பேசுவதற்கு ஒன்றிய அரசில் எந்த அமைப்பும் இல்லை. இதுதான் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சியின் மகிமை. எனவே, பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா பரிந்துரை செய்துள்ள ஒரு சதவிகித நிதி பகிர்வு குறைப்பினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஏற்கனவே மாநில உரிமைகளுக்காக போராடி வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சினையிலும் தனது உரிமைக்குரலை நிச்சயம் எழுப்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒன்றிய அரசுக்கு எதிரான இத்தகைய உரிமைப் போராட்டங்கள் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு வெற்றி பெறுவது உறுதியாகும். என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மாநில உரிமைகளை பேசுவதற்கு ஒன்றிய அரசில் எந்த அமைப்பும் இல்லை: செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.