சென்னை: மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதியை தராமல் ஒன்றிய அரசு வீண்பிடிவாதம் பிடிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழ்நாடு பிடிவாதமாக இருப்பதால் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். “தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை.
தன்னுடைய மொழிக்கொள்கை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறது. ஒன்றிய பா.ஜ. அரசு தான் மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியைத் தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது. இந்தி திவாஸ்’ கொண்டாடப்படும் போதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு இந்தியா முழுவதும் இந்தியை நடை முறைக்கு கொண்டுவருவோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பா.ஜ.வினரும், தெரிவிக்கிறார்கள்.
இதன் உள்நோக்கத்தை தமிழ்நாடு உணர்ந்திருப்பதால்தான் இந்தி ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அடிமைப்படுத்தி அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுக கர்நாடகத்தில் இருக்கிறது. மராட்டியத்தில் இருக்கிறது. அந்தமான் நிகோபார் தீவுகளில் கழகத்தினர் செயல்படுகிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களில் கன்னடம், மராத்தி, இந்தி, வங்காளம் என அந்தந்த மாநிலங்களுக்குரிய மொழிகளையும் அங்கே பயன்படுத்தப்படும் மொழிகளையும் அறிந்திருக்கிறார்கள்.
திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல – வலிந்து திணிக்கப்படும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும் என்பதை நடைமுறை எதார்த்தத்துடன் கடைப்பிடித்து வருகிறோம். ஏறத்தாழ 60 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையைக் கடைப் பிடிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் எந்தளவில் கல்வித்தரத்தில் பிற மாநிலத்தவருக்கு குறைவாக இருக்கிறார்கள்? உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எந்த மாநிலத்தைவிட பின்தங்கியிருக்கிறார்கள்? இதே வாதங்களை இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஆங்கில சேனலின் நெறியாளரிடம் இருமொழிக் கொள்கையில் படித்து உலக நாடுகள் எல்லாம் தன் திறமையை நிரூபித்து வரும் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வைத்தார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியையும் திறன் மேம்பாட்டையும் ஒன்றிய பா.ஜ அரசின் அறிக்கைகளே பாராட்டுகின்றன. இதன்பிறகும், மூன்றாவது மொழியைத் தமிழ்நாட்டின் மீது திணிக்க முயற்சிப்பதும், இந்த வல்லாதிக்க போக்கை ஏற்க மறுத்தால் நிதி தர முடியாது என மறுப்பதும் தமிழர்கள் மீது பா.ஜ. அரசு திட்டமிட்டு நடத்துகின்ற தாக்குதலாகும். மொழி சமத்துவத்தின் முதன்மைக் குரலாக தி.மு.க. ஒலிக்கும்.
மாநில உரிமைகளைப் பறிப்பதையே மறைமுக கொள்கை திட்டமாக கொண்டுள்ள பாஜ அரசு தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைத்திட திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிரான முதல் முழக்கத்தை எழுப்பியிருக்கிறது திராவிட மாடல் அரசு. மாநில உரிமைக் குரலை நசுக்கிவிட நினைக்கும் பா.ஐ.க.வின் நோக்கத்தை முறியடிக்கும் வகையில், மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதையும் தி.மு.க முன்னெடுக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* நியாயமான காரணத்தை சொல்லட்டும்
இந்தி பேசும் மாநிலங்களில் எத்தனை பேர் மும்மொழிப் பாடத்திட்டத்தில் பயின்று வருகின்றனர்? அவர்கள் படிக்கின்ற மூன்றாவது மொழி எது? இந்தியைத் தவிர இரண்டாவதாக ஒரு மொழியை சரி வரக் கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் எத்தனை உள்ளன? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான பதிலையும், உண்மையான புள்ளிவிவரங்களையும் அளித்துவிட்டு, தமிழ்நாட்டில் மூன்றாவது மொழித் திணிப்புக்கான நியாயமான காரணத்தை ஒன்றிய பா.ஜ. அரசு சொல்லட்டும்.
The post மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தராமல் ஒன்றிய அரசு வீண் பிடிவாதம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.