செம்பனார்கோயில்: மாநில உரிமை சார்ந்த கல்வி கொள்கையில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் கைப்பாவையாக விளங்குகிற யுஜிசி பல்கலைக்கழக மானியக்குழு 2025-ன் புதிய வரைவு விதிமுறைகளின்படி தற்போது உள்ள கல்வி முறையை மாற்றி, யார் வேண்டுமாலும் எந்த படிப்பையும் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால் படித்துவிடலாம் என மாற்றுவது கல்வியின் கட்டமைப்பை சிதைக்கும் செயலாகும்.
கலைஞர் முதல்வராக இருந்தபோது நுழைவுத்தேர்வு முறையை முற்றிலும் தடை செய்தார். அதன்காரணமாக 75 சதவீத மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாநில உரிமை சார்ந்த கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது. ஆளுநரே நியமன பதவியில் உள்ளவர் என்பதால் அவர் எவ்வாறு பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க முடியும். தமிழ்நாடு மாணவர்களின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கும் யுஜிசி விதிமுறையை திரும்பப்பெற வலியுறுத்தி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மாநில உரிமை கல்வி கொள்கையில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி appeared first on Dinakaran.