சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான டிடிஜிடி ஒலிம்பியாட் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. 10 அணிகள் கலந்து கொண் இந்தத் தொடரில் விருகம்பாக்கத்தில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் 50-23 என்ற கணக்கில் மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா அணியை வீழ்த்தியது.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும் ரூ.24 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் அசோக் குமார் முந்த்ரா, பொருளாளர் அசோக் கேதியா, கல்லூரி முதல்வர் சந்தோஷ் பாபு, உடற்கல்வித் துறை இயக்குநர் வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2-வது இடம் பிடித்த விவேகானந்தா வித்யாலயா அணிக்கு ரூ.18 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த சவுகார்பேட்டை ஸ்ரீ ஏ.ஜி.ஜெயின் மேல்நிலைப் பள்ளி அணிக்கு ரூ.12 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.