சென்னை: மாநில எல்லைக்குள் உள்ள தனது மக்களை காக்க அரசு சட்டம் கொண்டு வரலாமே என்று ஆன்லைன் நிறுவனங்கள் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயம். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் சஜ்ஜன் பூவையா ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது, கார் ரேஷ், வீடியோ கேம், கேண்டி க்ரஷ் உள்ளிட்ட பல ஆன்லைன் விளையாட்டுகள் உள்ள நிலையில் அவற்றை ஒழுங்குபடுத்தாமல் ரம்மியை மட்டும் அரசு ஒழுங்குபடுத்தியுள்ளது. இரவு 12 மணி முதல் காலை 5மணி வரை ஆன்லைனில் ரம்மி விளையாட மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத தடை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. 5 மணி நேரம் விளையாடக் கூடாது என்ற விதி தொழில் செய்யும் உரிமையை பாதிக்கும் என்று வாதிட்டனர். எந்த ஆவணங்களை வேண்டுமானாலும் அளிக்கலாம் என மத்திய அரசின் விதி உள்ளது. இந்த நிலையில் கட்டாயம் ஆதரை அளிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்த முடியாது என்று வாதிட்டனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், மற்ற விளையாட்டுகளில் ஒருவர் வெற்றி பெற்று மற்றொருவர் தோல்வி அடைந்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் இங்கு தோல்வி அடையும் ஒருவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே?. தனது மாநில எல்லைக்குள் இருக்கும் மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வரலாமே? சில ஆன்லைன் விளையாட்டுகள் மட்டுமே அடிமைப்படுத்தும் வகையில் உள்ளது. அது போன்ற விளையாட்டுகளை மாநில அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது. மதுபானம் விற்பதற்கு கூட நேரக் கட்டுப்பாடு உள்ளது என்று தெரிவித்தனர். இந்த வழக்கின் வாதம் இன்றும் நடைபெறவுள்ளது.
The post மாநில மக்களை காக்க அரசு சட்டம் கொண்டு வந்தால் தவறாகுமா? ஆன்லைன் நிறுவனங்கள் வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.