மானாமதுரை: மானாமதுரை பகுதியில் நெல் சாகுபடி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அறுவடை இயந்திரங்களின் கட்டணம் உயர்ந்துள்ளது. நெல் சாகுபடியில் போதிய லாபம் கிடைக்காத நிலையில், உற்பத்தி செலவு அதிகரிப்பால், விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத்தில் வைகை ஆற்றுப்பாசனம் மற்றும் கண்மாய், கிணற்று பாசனம் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கடந்த நவம்பர் மாதம் தொடக்கத்தில் நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. கடந்த காலங்களில் கூலி ஆட்கள் மூலம் நெல் அறுவடை பணி நடைபெற்று வந்தது. ஆனால், இந்த நிலைமை தற்போது முற்றிலும் மாறிவிட்டது.
விவசாயிகளில் பெரும்பாலானோர் அறுவடை இயந்திரம் மூலமே நெல் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்படுகின்றன. ஆனால், நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஆண்டுக்காண்டு கடுமையாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேர வாடகையாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது. ஆனால், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு மணிக்கு ரூ.3,000 வரை கேட்கப்படுகிறது. இதனால் கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் விவசாயிகள் குறைந்த வாடகை இயந்திரங்களுக்காக காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுவடையை முடிக்க முடியாமல் விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து மானாமதுரை விவசாயி சுப்பிரமணியன் கூறியதாவது: கூலி ஆட்கள் மூலம் நெற்பயிர் அறுவடை செய்யும் நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் அனைத்து வயல்களும் இயந்திரம் மூலமே அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. சேலம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம். தொடக்க காலத்தில் மணிக்கு ரூ.1,500 வாடகை வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.2,500 முதல் ரூ.2,600 வரை வசூலித்தனர். தற்போது டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களை கூறி மணிக்கு ரூ.3,000 வரை கேட்கின்றனர். மேலும், ஈரத்தன்மை உள்ள வயல்களில் செயின் மூலம் இயங்கும் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.3,200 வரை வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, வைக்கோல்களை கட்டுகளாக கட்டும் இயந்திரத்திற்கும் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விவசாயத்தில் ஏற்கெனவே போதிய லாபம் கிடைக்காத நிலையில், அறுவடை இயந்திர வாடகை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அறுவடை தாமதம் ஆவதால் பயிர்களை பாதுகாக்க குடும்பத்துடன் வயலில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை துறை மூலம் மாவட்டந்தோறும் உழவு இயந்திரம், நாற்று நடும் இயந்திரம் மற்றும் அறுவடை இயந்திரங்களை விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மானாமதுரை பகுதியில் ஆண்டுதோறும் உயரும் அறுவடை இயந்திரங்களின் கட்டணம்: விழிபிதுங்கும் நெல் சாகுபடி விவசாயிகள் appeared first on Dinakaran.