ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.மானவாரி பயிர்சாகுபடிக்கு மழை உதவியாக இருக்கும் என்பதால், மழையை எதிர்பார்த்து வானம் பார்த்த பூமிகளில் சோளம், கம்பு, கடலை, சோளம், கேள்வரகு, கொள்ளு, எள், சூரியகாந்தி, மொச்சை மற்றும் இதர காய்கறி பயிர்களான கத்தரி, மிளகாய், கொத்தமல்லி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
உளுந்து மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனப்பயிர்களையும் விவசாயிகள் விதைக்கின்றனர். பருவநிலை மாற்றத்தால் ஆண்டுக்கு ஆண்டு மழையளவில் மாறுபாடு இருந்த போதும், போதிய மழை கிடைத்தால் மானாவாரி சாகுபடியில் அதிக விளைச்சல் மற்றும் வருமானம் ஈட்ட முடியும் என்பதால் தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடைகாலம் முடிந்தவுடன் விவசாயிகள் மானாவாரி சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தேனி அருகே குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரி சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்தப் பகுதி விவசாயிகள் நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மானாவாரி விவசாயத்துக்கு தற்போது நிலத்தை தயார்படுத்தி வருகிறோம். இறவைக்கு கம்பு உள்ளிட்ட பயிர்கள் நல்ல வருமானம் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததால் பருவமழை சீராக கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.நிலம் பண்படுத்துதலின் வகைகள்:
இதுகுறித்து வேளாண்துறையினர் கூறுகையில், பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை, உழவு முறை மாறுபடும். ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்தில உழவு போன்றவை ஆகும். ஆழமான உழவு கோடையில் உழுவதால் உருவாகும் பெரிய மண் கட்டிகள் சூரிய வெப்பத்தில் காய்கின்றன.
இக்கட்டிகள் மாறிமாறி வரும் வெப்பம் மற்றும் குளிரினால் நொறுங்குகின்றன. எப்பொழுதாவது வரும் கோடை மழையினால் நனைகின்றன. இவ்வகை சீரான மண் கட்டி சிதைவினால் மண் கட்டமைப்பு மேம்படுகிறது. பல்லாண்டு வாழ் களைகளின் உலகம் முழுவதும் பரவியுள்ள களைகளை அருகம்புல் மற்றும் சைப்ரஸ் ரோட்டுன்டஸ் கிழங்கு மற்றும் வேர்க் கிழங்குகள் சூரிய வெப்பத்திற்கு உட்படும் போது அழிகின்றன.
கோடைக்கால ஆழமான உழவு, கூட்டுப்புழுக்களை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன. துவரை போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25-30 செ.மீ ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15-20 செ.மீ ஆழ உழவும் தேவை. மேலும் ஆழமான உழவு, மண் ஈரப்பதத்தை உயர்த்தும்.
மானாவாரி வேளாண்மையில் மழைப்பருவம் மற்றும் பயிரினை பொருத்து ஆழ உழவின் நன்மை அமையும். ஆழ வேர்ப் பயிர்களுக்கு, ஆழ உழவு முறை நீண்ட இடைவெளியில் பரிந்துரைக்கப்படுகிறது. ஆழ உழவு மழை ஈரப்பத அளவை பொருத்து அமையும். கடின மண் தட்டு, பயிரின் வேர் வளர்ச்சியை தடுக்கலாம்.
இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு அல்லது அலுமினியம் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுக்களாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே ஆழத்தில் உழுவதால், மனிதனால் உருவாக்கப்படும் தட்டு உண்டாகிறது. கடினமண் தட்டினால், பயிரின் வேர் ஆழமான வளர்வது தடுக்கப்படுவதினால், ஒரு சில செ.மீ ஆழத்தில் வேர்கள் அடர்ந்து காணப்படும். அடிமண் சால்கள் மூடுவதைத் தடுக்க, செங்குத்து நிலப்போர்வை அமைக்கப்படுகிறது.
வருடம் முழுவதும் நடைபெறும் உழவு செயல்பாடுகளே வருடாந்திர உழவு ஆகும். மானாவாரி வேளாண்மையில் கோடை மழையின் உதவியுடனே, வயல் முன்னேற்பாடுகள் தொடங்கும். பயிர் வளர்ந்த பின் செய்யப்படும் அனைத்து உழவு செயல்களும் சாகுபடிக்கு பின் செய் நேர்த்தி ஆகும். அவை மேலுரமிடுதல், மண் அணைத்தல் மற்றும் ஊடுபயிரிடுதல் போன்றவை. நாட்டுக் கலப்பை அல்லது சால் கலப்பைக் கொண்டு மண் அணைத்தல் செய்வதின் மூலம் பயிரின் அடிப்பகுதியில் சால் அமைக்கப்படுகிறது.
கரும்பில் இது பயிர் சாயாமல் இருக்கத் துணையாக இருக்கும். உருளைக்கிழங்கு போன்ற கிழங்குப்பயிரில் கிழங்கு வளர்ச்சிக்கு உதவும் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்ச வசதியாக அமையும். ஊடுபயிர் உற்பத்தியில் பயிர்களுக்கு இடையே உள்ள களைகளை களைவதற்கு கத்தி பலுகு, சுழற்சி பலுகு போன்றவை பயன்படுகின்றன. கரிசல் மண்ணில், ஊடுபயிர் இடுவதன் மூலம் மண் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளலாமென தெரிவித்துள்ளனர்.
The post மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் நிலத்தை தயார் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.