தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டேனேக்ரோவின் செடின்ஜே நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த வாய்த் தகராறு மோதலாக மாறியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மான்டேனேக்ரோ நாட்டின் செடின்ஜே நகரில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இங்கு அகோ மார்டினோவிக் (45) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அவர் நாள் முழுவதும் மது அருந்திக் கொண்டிருந்தார். இதனால் விடுதி உரிமையாளருக்கும் அகோ மார்டினோவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாலையில் வீட்டுக்கு சென்ற மார்டினோவிக் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மீண்டும் மது விடுதிக்கு வந்தார். விடுதி உரிமையாளர் உட்பட 4 பேரை அவர் சுட்டுக் கொன்றார். மதுபான விடுதியைவிட்டு வெளியேறிய அவர் 3 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.