மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில். புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஆர்வ மிகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆதிபராசக்தி கோயில் பக்தர்கள் கோலம் போட்டு அசத்தினர். பேரூராட்களின் ஆணையர் கிரன் குரலா உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா மேற்பார்வையில், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி அர்ஜூனன் தபசு முன்பு நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த் ராவ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தனசேகரன், கவுன்சிலர்கள் கெஜலட்சுமி கண்ணதாசன், பூபதி, துர்காசினி சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பேரூராட்சி பணியாளர்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் பணியாளர்கள், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் டயர்களை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் மற்றும் ஆதிபராசக்தி கோயில் பக்தர்கள் ஆர்வ மிகுதியில் கோலம் போட்டு அசத்தியதை காண முடிந்தது. தொடர்ந்து, பேரூராட்சி பணியாளர்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு, கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை வழியாக பேரணியாக வந்து சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், தேவையில்லாத பொருட்களை தீயிட்டு எரிக்கக் கூடாது என பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.
The post மாமல்லபுரத்தில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.