மாமல்லபுரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாமல்லபுரம் அருகே தாகத்தை தணித்து, கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றன. இதனால் சிறு வியாபாரிகளும் ஏழை மக்களும் பயன்பெற்று வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனால் வெயிலில் நேரத்தில் நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் செய்பவர்கள், ஆங்காங்கே உள்ள சிறுகடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் கிராமத்து மக்கள் விற்பனை செய்யும் இளநீர், சர்பத், குளிர்ச்சி தரும் பழங்களை வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் அருகே நெம்மேலி, இசிஆர் சாலையை ஒட்டிய பகுதிகளில், கடந்த சில நாட்களாக உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கத்தரி வெயில் பிறப்பதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை தேடி பிடித்து வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், குறிப்பாக அயனி சக்கை, லிச்சி, வாட்டர் ஆப்பிள், சப்போட்டா மற்றும் ஆரஞ்சு பழங்கள் எங்கெங்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டறிந்து, அங்கு மேற்கண்ட பழ வகைகளை கிலோகணக்கில் வாங்கும் வகையில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
அதேபோல், கற்றாழை ஜூஸ், வெள்ளரி பழ ஜூஸ், தர்பூசணி ஜூஸ் மற்றும் சாத்துக்குடி ஜூசுக்கும் மவுசு அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிறுவியாபாரிகளும் கிராமத்து மக்களும் கூறுகையில், நமது உடலின் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தி, தாகத்தை தீர்ப்பதில் அயனி சக்கை, வாட்டர் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் சிறந்தது என்பதால், அதன் விலையை பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர். கத்தரி வெயில் பிறந்தவுடன் இப்பழங்களின் விற்பனை இன்னும் அதிகரிக்க கூடும் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post மாமல்லபுரம் அருகே தாகத்தை தணிக்கும் பழங்களின் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.