மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் காணும் பொங்கலன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டிருந்தனர். அவர்கள் மாமல்லபுரம் சிற்ப கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில், கவர்கள் உள்பட ஏராளமான குப்பை கழிவுகளை போட்டுவிட்டு சென்றனர். இதனால் ஆங்காங்கே குப்பை கழிவுகள் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசியது. மேலும், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டது.
தகவலறிந்து மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் சந்திரகுமார் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், நேற்று முன்தினம் இரவு முதல் துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை அகற்றி, தூய்மை பணிகளில் பேரூராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கை மூலமாக, நேற்று சுமார் 3 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், குப்பைகளை கண்ட இடங்களில் போடாதீர்கள் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகள் வைத்தும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாமல் குப்பை போட்டுவிட்டு சென்றிருப்பது வேதனை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். குப்பை கழிவுகளை அகற்றிய பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
The post மாமல்லபுரம் பேரூராட்சியில் 3 டன் குப்பை கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.