மாமல்லபுரம்: மாமல்லபுரம் மரகத பூங்காவில் ரூ8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் மின் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரத்தில் கடந்த 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை அழகுர செதுக்கினர். இந்த புராதன சின்னங்கள் உலகம் போற்றும் வகையில் கம்பீரமாக நின்று பயணிகளுக்கு காட்சி தருகிறது. இங்குள்ள சிற்பங்களை கண்டு ரசிக்கவும், கடற்கரையில் கால் நனைக்கவும், இங்கு கடற்கரைக்கு செல்லும் வழியில் விற்கப்படும் வறுத்த மீன்களை ருசி பார்க்கவும் அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் என ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 6 மாதங்கள் சீசன் காலம் என்பதால் லட்சக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் வருவார்கள். மேலும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ8 கோடி மதிப்பில் மாமல்லபுரம் பழைய சிற்பக் கல்லூரி சாலையில் உள்ள மரகத பூங்காவில் சுற்றுலா துறையுடன் இணைந்து தனியார் மற்றும் பொதுப் பங்களிப்புடன் ரூ8 கோடி மதிப்பீட்டில், 10 லட்சம் மின் விளக்குகள் மூலம் விலங்குகள், வண்ண வண்ண ஒளிரும் பூக்கள், ஒளிரும் மரங்கள், போட்டோ மற்றும் செல்பி எடுக்கும் இடங்கள், செயற்கை நீரூற்று, மினி 3டி, 5டி சினிமா, ஒளிரும் நீர் பூங்கா மற்றும் பலதரப்பட்ட உணவு அரங்குகள் என 2.47 ஏக்கர் பரப்பளவில் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கி நடந்து வந்த நிலையில், சில நிர்வாக காரணங்களுக்காக பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ரூ8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் மின் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில், தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மாமல்லபுரம் மரகத பூங்காவில் ரூ8 கோடியில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.