நெல்லை : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகாலை வேளையில் நல்ல பனி பொழிந்து வருகிறது.பருவநிலை மாற்றம் காரணமாக சமீபகாலமாக பருவமழையும், பனிக்காலமும் குறித்த நேரத்தில் வருவதில்லை. கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பருவமழையானது அக்டோபர் மாதத்தில் பெய்யாமல் டிசம்பர் மாதமே பெய்தது.
அதுபோல பனிக்காலமும் கடந்த இரு ஆண்டுகளாக குறித்த காலத்தில் தொடங்கவில்லை. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஜனவரி 20ம் தேதி வரை நீடித்த நிலையில், தற்போது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
நெல்லை சுற்றுவட்டாரங்களில் வென்பா எனப்படும் அதிக பனிப்பொழிவு காலை நேரத்தில் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அதேசமயம் பகல் நேரத்தில் காலை 9 மணிக்கு பின்னர் வெயிலின் உக்கிரத்திற்கும் குறைவில்லை. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் காலை 8 மணி வரை பனிப்பொழிவு இருப்பதால், நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. பூ வரத்தும் மார்க்கெட்டுகளில் குறைய தொடங்கியுள்ளது.
பொதுவாக மார்ச் மாதம் என்பது வெயில் காலமாகும். இக்காலக்கட்டத்தில் பனி முடிந்து வெயிலின் வெம்மை தெரிய தொடங்கும். ஆனால் இவ்வாண்டு பனிக்காலமே இன்னமும் முடிந்த மாதிரி தெரியவில்லை. காலை நேரத்தில் பெய்யும் பனி காரணமாக காலை நேரத்தில் நல்ல குளிர் காணப்படுகிறது. திறந்த வெளியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் இருக்கைகள் மழை பெய்தாற்போல் குளிர்ந்து காணப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முதல் மழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், அதையும் எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
The post மார்ச் மாதம் பிறந்தும் மாற்றமில்லை நெல்லை, தூத்துக்குடியில் அதிகாலை பனி அதிகரிப்பு appeared first on Dinakaran.