சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க சட்டத்திருத்தம் செய்யப்படும் என முதல்வர் கூறியிருந்தார். இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் தேர்வு செய்யப்படுவதற்கான சட்ட முன்வடிவுகளை முதலமைச்சர் இன்று அறிமுகம் செய்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி: மசோதா தாக்கல்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கலைஞர்தான் மாற்றுத்திறனாளி என்ற சொல்லை உருவாக்கினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல்
மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும். 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும். இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன். அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பை கலைஞர் எனக்கு வழங்கினார். அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போது அடைகிறேன்.
கிராம பஞ்சாயத்து: 12,913 மாற்றுத்திறனாளிகள் நியமனம்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் 650 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவர். கிராம பஞ்சாயத்துகளில் 12,913 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவர். ஊராட்சி ஒன்றியங்களிலும் 318 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவர். மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவர்.
குரலற்றவர்களின் குரலாக உள்ளது அரசு: முதல்வர்
குரலற்றவர்களின் குரலாக திராவிட மாடல் அரசு உள்ளது; என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும் மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்காகவே இருக்கும். இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.667 கோடியில் இருந்து இரு மடங்காக உயர்ந்துள்ளது; அரசுப் பணித் தேர்வில் 4% இட ஒதுக்கீட்டின்மூலம் 493 பேர் அரசுப் பணியை பெற்றுள்ளனர் .ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரம் பொருந்தியவர்களாக உயர்த்துவதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம் என முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
The post மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.