*விழிப்புணர்வு பேரணியில் தகவல்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் பாதிப்பை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஊட்டியில் காசநோய் விழிப்புணர்வு பேரணியில் தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் பாதிப்பை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக காசநோய் பாதிப்பை தடுக்கும் வகையில் 100 நாட்களுக்கு காசநோய் ஒழிப்பு குறித்த பிரச்சாரம் மற்றும் காசநோய் கண்டறியும் முகாம் கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி முதல் கடந்த 17ம் தேதி வரை நடைபெற்றது.
காசநோய் பாதிப்பை குறைக்கவும் மற்றும் இறப்பு சதவீதத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் காசநோய் ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் காசநோய் எளிதில் பாதிக்கப்படக்கூடிய 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், எச்ஐவி.,யால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள், புகை பிடிப்பவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் கடந்த காலங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது.
உலக காசநோய் தினத்தை ஒட்டி ஊட்டியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ரயில் நிலைய பகுதியில் துவங்கிய பேரணியில் கலந்து கொண்ட ஊட்டி அரசு மருத்துவ கல்லூாி, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பாதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர். இப்பேரணி மார்க்கெட், கமர்சியல் சாலை வழியாக சேரிங்கிராஸ் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அருகே நிறைவடைந்தது.
இப்பேரணியில் மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன், மாவட்ட சுகாதார அலுவலர் சோமசுந்தரம், மருத்துவ பணிகள் (காசநோய்) துணை இயக்குநர் கனகராஜ், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சபரீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘‘தொடர்ந்து இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு, நெஞ்சுவலி, இரவில் வியர்த்தல், சளியில் ரத்தம் வருதல் உள்ளிட்டவைகள் காசநோயின் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் உள்ள நபர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று இலவச காசநோய் பரிசோதனை செய்து கொள்ளலாம். காசநோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் உலகத்தர வாய்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.
சிகிச்சை காலம் முடியும் வரை ரூ.500 ஊட்டச்சத்து உதவித்தொகையாக வழங்கப்படும். பரிந்துரை செய்யும் தனியார் மருத்துவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும். தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெறும் காச நோயாளிகளுக்கும் ரூ.500 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்கப்படும்’’ என்றனர்.
The post மாவட்டத்தில் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் பாதிப்புகளை முற்றிலும் ஒழிக்கும் இலக்குடன் நடவடிக்கை appeared first on Dinakaran.