தமிழக சட்டப் பேரவையில் நேற்று காட்டுமன்னார்கோயில் சிந்தனை செல்வன்(விசிக) பேசியதாவது: நாட்டுப்புறவியல் அருங்காட்சியகத்தை ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் உருவாக்க வேண்டும். தொன்மை விளையாட்டுகளையெல்லாம் புத்தாக்கம் செய்யக்கூடிய வகையில் நாட்டுப்புற விளையாட்டு மேம்பாட்டு மையம் அமைக்க முன்வர வேண்டும். அதை முதற்கட்டமாக சென்னையிலும், மதுரையிலும் தொடங்க வேண்டும். மேலும் டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வாணையங்களும் கூட நாட்டுப்புறவியலை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமானது, மிக முக்கியமானதொரு பல்கலைக்கழகம்.
அதன் பொலிவை மீட்டெடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அங்கிருக்கிற அத்தனை பணியிடங்களையும் அரசு நிதி பெறுகிற பணியிடங்களாக அறிவித்து, பணிவரன்முறை, பணி மேம்பாடு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சீராய்வுக் குழுவை அமைக்க வேண்டும். மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், சென்னை போன்ற முக்கியமான பகுதிகள் ஒவ்வொன்றிலும் ஆண்டுதோறும் தமிழர்களின் கலை விழாவை நடத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post மாவட்ட தலைநகரங்களில் நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம்: பேரவையில் விசிக எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.