சென்னை: மாவோயிஸ்ட் அமைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்டதாக கூறி, மருத்துவ மாணவியின் கல்விக்கட்டணத்தை முடக்கி, தேசிய புலனாய்வு முகமை பிறப்பித்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மாணவிக்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்படும் மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டதாக கூறி, அந்த தொகையை முடக்கி, தேசிய புலனாய்வு முகமை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாணவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாணவி தரப்பில், டாப் 5 மாணவியான மனுதாரரின் கல்விக்கட்டணம் முடக்கப்பட்டதால், கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் தர மறுப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகக் கூறி, என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், என்.ஐ.ஏ. சம்மனுக்கு ஆஜராகி, உரிய விளக்கத்தை அளித்து, கல்விக்கட்டணம் முடக்கத்தை நீக்க கோரலாம். நல்ல முறையில் படிக்கும் மாணவி, எதிர்காலத்தில் பயங்கரவாத அமைப்பில் சேரமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?. ஜோர்டான் போன்ற நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளில் நல்ல முறையில் படிப்பவர்கள் தான் சேர்கின்றனர் எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
The post மாவோயிஸ்ட் அமைப்பு நிதியிலிருந்து மருத்துவ மாணவிக்கு தரப்பட்ட கல்விக்கட்டணம் முடக்கத்தில் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.