சென்னை: மின் கட்டமைப்பு நவீன மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ₹3,200 கோடி நிதி உதவிக்கு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் தலைமையில் நேற்று மும்பையில் நடைபெற்ற 2வது மாநில மின்துறை அமைச்சர்களின் குழு கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாடு அரசின் சார்பாக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் மின் துறையின் நிதியை மேம்படுத்தவும் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மின் துறைக்கு மின் மானியமாக ₹53,000 கோடி மற்றும் நிதி இழப்பீடு தொகையாக ₹52,000 கோடி என மொத்தம் ₹1.05 லட்சம் கோடி அளவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் மின் கொள்முதல் மற்றும் வட்டி செலவினங்கள் மின் வாரியத்திற்கு மிகவும் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.
பல்வேறு சீரிய முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அதிகரித்து வரும் மின்தேவை, கார்பன் உமிழ்வினால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை புதிய மின் உற்பத்திக்கு பெரும் சவாலாக உள்ளது. அதிகரித்து வரும் மின் தேவை மற்றும் கார்பன் உமிழ் வினை தடுத்திடும் நோக்கில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ₹2 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு தேவைப்படுகிறது. 16வது நிதிக்குழு அடுத்த 5 ஆண்டுகளுக்கான நாட்டின் பொது நிதி ஆதாரங்களை இறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், மின் துறைக்கான சிறப்பு மானியத்தின் முக்கியத்துவத்தினை நாம் ஒருகிணைந்து வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தின் கீழ் மின் கட்டமைப்பு நவின மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ₹3,200கோடி நிதி உதவிக்கு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும். ரைகா-புகலுர் – திருச்சூர் உயர் மின் வழித்தடத்தினை தேசியதிட்டமாக அறிவித்து அதன் படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post மின் கட்டமைப்பு நவீன மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ₹3,200 கோடி நிதிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்: மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல் appeared first on Dinakaran.