மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. உணவு, கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு கொண்டு சேர்த்துள்ளது.
பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு: இதற்கிடையில், மியான்மரின் ராணுவ ஆட்சித் தலைவரான மின் ஆங் ஹ்ளெய்ங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இது குறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “மியான்மர் ராணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்ளெய்ங்குடன் பேசினேன். பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழிப்புகளுக்காக ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டேன். மியான்மரின் நட்பு தேசம், அண்டை நாடு என்ற வகையில் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா மியான்மர் மக்களுடன் தோளோடு தோள் நிற்கும் என்று உறுதியளித்தேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.