மியான்மரில் நேற்று (மார்ச் 28) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டிலும் நிலநடுக்கத்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சட்டுசக் மார்கெட் பகுதியில் கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பணியாற்றிவந்த 100-க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்றும் தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.