நேப்பிடா: மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர். 373 பேர் காணாமல் போயுள்ளனர். அதேபோல், அண்டை நாடான தாய்லாந்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. 72 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.
இதனிடையே, மியான்மரில் நிவாரணப் பணிகளுக்காக அங்குள்ள சீனத் தூதரகம், உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு 1.5 மில்லியன் யுவான் ரொக்கம் வழங்கியுள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. மியான்மரின் ராணுவ அரசாங்கம் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி வாகன அணிவகுப்பை எச்சரிக்கும் வகையில் தங்களின் துருப்புகள் வானத்தை நோக்கிச் சுட்டதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து தங்களுடைய மீட்புக் குழுவும் பொருள்களும் பாதுகாப்பாக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.