பொன்னேரி: மீஞ்சூர்-பொன்னேரி சாலையில் நாள்தோறும் ஏராளமான அரசு பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு சுவர்கள், அசுத்தமான காற்று மற்றும் வாகனங்களின் கரும்புகையால் பொலிவிழந்து காணப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் புகார் செய்தனர். தொடர்ந்து, பொன்னேரி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் ஆலோசனைபேரில், கோட்ட பொறியாளர் சிற்றரசு, உதவி கோட்ட பொறியாளர் பாலசந்தர், இளநிலை பொறியாளர் பரந்தாமன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக சுமார் 12 கிமீ நீளமுள்ள மீஞ்சூர்-பொன்னேரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள், வேகத்தடைகள், மினி பாலங்களை தூய்மைப்படுத்தி, வர்ணம் தீட்டும் பணிகளில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மீஞ்சூர்-பொன்னேரி சாலையில் தடுப்பு சுவர்களுக்கு வர்ணம் தீட்டும் பணி appeared first on Dinakaran.