ஒரு நாட்டின் எதிர்காலம் அதை ஆளும் கட்சியிடம் மட்டும் இல்லை; எதிர்க்கட்சிகளும் சேர்ந்தே அதைத் தீர்மானிக்கின்றன. இக்கட்டான ஒரு காலகட்டத்தில் நாட்டின் மூத்த கட்சியும் இன்றைய பிரதான எதிர்க்கட்சியுமான காங்கிரஸ் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை வெறுமனே அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று கருதிட முடியாது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி, தன்னுடைய குடும்பத்துக்கு வெளியிலிருந்து புதிய தலைமையைத் தேர்ந்தெடுக்கக் கட்சியினரிடம் கேட்டுக்கொண்டது உள்ளபடி நல்ல விஷயம். காங்கிரஸின் சாதனைகளுக்கு எப்படி நேரு குடும்பம் முக்கியமான பங்களிப்புகளை ஆற்றியுள்ளதோ அதேபோல காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் அது கணிசமான பங்கை ஆற்றியுள்ளது. கட்சியைப் பின்னடைவிலிருந்து மீட்கும் முயற்சியில் குடும்பம் தோற்றுவிட்டதையே ராகுலின் முடிவு உணர்த்தியது. ஆனால், நேரு குடும்பத்துக்கு அப்பாற்பட்ட ஒரு தலைமையைக் கற்பனைசெய்யும் ஆற்றல் காங்கிரஸாரிடமிருந்து வெளிப்படவில்லை.
ராகுல் விரும்பிய மாற்றங்களுக்கு அதன் மூத்த தலைவர்கள் ஒரு தடையாக இருந்ததும் அவருடைய முடிவுக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. நேரு குடும்பமே தலைமைப் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் குறைந்தபட்சம் ராகுல் விரும்பும் மாற்றங்களை அவர் மேற்கொள்ள ஏதுவாக ‘ஒட்டுமொத்த ராஜிநாமா’ போன்ற ஒரு உத்தியையேனும் முன்வைத்து, ராகுலை மீண்டும் தலைவர் பதவி நோக்கி அழைத்திருக்கலாம். மோசமான முடிவாக அவருடைய தாயார் சோனியாவையே தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். சுழன்றடித்துப் பணியாற்றும் ஒரு தலைவரை எதிர்நோக்கியிருக்கும் கட்சியின் தேவையைப் பூர்த்திசெய்ய சோனியாவின் உடல்நிலை அனுமதிக்கவில்லை. ராகுலின் முடிவிலும் மாற்றம் இல்லை. ஆக, ஓராண்டுக்கும் மேலாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் பல செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. இத்தகு சூழலில்தான் முழு நேரமும் துடிப்பாகப் பணியாற்றும் ஒரு தலைவருக்கான தேவையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சோனியாவுக்குக் கடிதம் எழுதினர். கட்சி மீதான அக்கறையின் விளைவாகவே இதை அணுக வேண்டியிருக்கிறது. ஒன்று, நேரு குடும்பத்திலிருந்து ஒரு முழு நேரத் தலைவர் அல்லது நேரு குடும்பத்துக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவர். இந்தத் தீர்வை ஆத்மார்த்தமாக அணுகியிருக்க வேண்டும் கட்சி. ஆனால், முன்னுதாரணமற்ற இத்தகு சூழலை எவ்வளவு மோசமாகக் கையாள வேண்டுமோ அப்படியே கையாண்டிருக்கிறது காங்கிரஸ். நியாயமான கேள்விகளை எழுப்பிய கட்சி சகாக்களின் மீது காங்கிரஸ் செயற்குழு வசைகளைப் பொழிந்ததோடு, நேரு குடும்பத்தின் மீதான விசுவாசத்தையே கட்சியின் பரிபூரண நலனாகப் பிரஸ்தாபித்து ஓய்ந்திருக்கிறது.
காங்கிரஸைப் பீடித்து, அதை வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றுகொண்டிருக்கும் நோயைப் பற்றி அந்தக் கட்சியினர் மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட எவருமே கவலை கொள்வதற்கான நியாயம் இருக்கிறது என்பதை அக்கட்சியின் தலைமை உணர வேண்டும். ஒரு பெரிய மாற்றத்துக்குக் கட்சி தயாராக வேண்டும். கட்சிக்காகவும் தேசத்துக்காகவும் கடந்த காலங்களில் நேரு குடும்பம் செய்த தியாகங்களை யாரும் மறந்திட முடியாது. அதே சமயம், ஒரு குடும்பத்தின் குழப்பங்களுக்கு ஒரு பெரிய கட்சி பலியாகவும் கூடாது. கட்சியினரின் முதல் தேர்வாகவுள்ள தன்னுடைய பிள்ளைகளுக்குத் தலைமைப் பதவியில் உளபூர்வமாகவே? விருப்பம் இல்லை எனில், உடனடியாகக் குடும்பத்துக்கு வெளியிலிருந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுவே கட்சி மீதான நேரு குடும்பத்தின் உண்மையான அக்கறையின் வெளிப்பாடாக இன்று இருக்க முடியும்.