சென்னை: “கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 530 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை கடற்படையினரால் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு இதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை அண்ணாமலை விளக்குவாரா ? தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கிற உரிமை போராட்டத்துக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தொலைக்காட்சி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கச்சத்தீவை இலங்கைக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொடுத்தது ராஜதந்திர நடவடிக்கை என்று கூறியிருந்தேன். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை அரசால் பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது தான் ராஜதந்திரமா என்று கேட்டிருக்கிறார். எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது.