சென்னை: “தமிழகத்தில் உள்ள நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு ‘லைஃப் ஜாக்கெட்’ எனப்படும் உயிர்காக்கும் கவச உடை, மானிய விலையில் வழங்கப்படுகிறது.” என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம், தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் நாட்டுப் படகு உரிமையாளர்கள் பயன் பெறுவர் என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடலில் மீன்பிடிக்கும் போது இயற்கை சீற்றங்கள் அல்லது விபத்து உள்ளிட்ட காரணங்களால் படகு கவிழ்ந்து அல்லது படகில் செல்லும் போது தவறி விழுந்து மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதைத் தவிர்க்க படகில் செல்லும் அனைவரும் கட்டாயம் உயிர் காக்கும் கவச உடையான ‘லைஃப் ஜாக்கெட்’டை அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.